DEVARAJAN VENKATA'S BLOG
Friday, October 12, 2007
  துவாரகைப் பிரயாணம்-பாகம் 3


பொதுவாக வட இந்திய கோயில்களில் 'பண்டாக்கள்' என்ற பூஜாரிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டு தொந்திரவு செய்வார்கள். எனக்குத் தக்ஷிணை கொடுங்கள் எனப் பணம் பிடுங்கும் பிடுங்கல் இங்கே கிடையாது. நாம் கொடுப்பதெல்லாம் தேவஸ்தானக் கணக்கில் சேர்க்கப் படுகிறது.
துவாரகை ஸ்ரீ கிருஷ்ணர் ஆண்ட புண்ணிய பூமி என்று சொல்வதற்கேற்ற பல போற்றத் தக்க விஷயங்களைச் சொல்லுகிறேன்.
ஊரில் எங்கும் திருடு, சூது கிடையாது. நம் பாதணிகளை எங்கு விட்டுச் சென்றாலும் எவரும் எடுத்துச் செல்ல மாட்டார்கள்.
(சென்னையில் என்னுடைய புதிய செறுப்பை ஆஞ்சனேயர் ஆலயத்தின் முன்னே சில நிமிஷங்களுக்கு விட்டுச் சென்று திரும்புவதற்குள் திருடப் பட்டதை நினைத்துக் கொண்டேன்}
எல்லாக் கடைகளிலும் பொருள்களின் விலை ஒன்றே. ஊர் முழுவதும் சைவம்; முட்டையோ, மாமிசமோ கிடையாது.
தரிசனம் செய்து கொண்டு நாங்கள் தங்கியிருந்த ராதிகா ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
மறு நாள் காலையில் பத்து பத்து ரூபாய் வாடகையில் ரிக் ஷா வைத்துக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்துக்குப் போனோம். முன்னாள் எங்களைச் சந்தித்த பூஜாரி துளசி மாலையும், கையுமாக எங்களைப் பார்த்து துளசி பூஜைக்கு ஏற்பாடு செய்து விட்டதாகத் தெரிவித்தார். சரி, நம்மை உள்ளே ஒரு புறம் உட்காரவைத்து எங்களனைவருக்கும் அங்கேயே சங்கல்பம் செய்வித்தார். கோத்திரம், நக்ஷத்திரம், பேர் முதலானவற்றைக் கேட்டுக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கான துளசி் மாலையை என் கையில் கொடுத்து அவர் சொல்லும் மந்திரங்களை உச்சரிக்கச் செய்தார். பிறகு நான் சங்கல்பம் செய்த மாலையைத் தான் வாங்கிக் கொண்டு கடவுளுக்கு தான் சமர்ப்பிப்பதாகக் கூறினார். அன்ன தானத்துக்கான காணிக்கைச் சீட்டை அவரிடம் ஒப்படைத்தேன். (அச் சீட்டில் என் பெயரும், தேதியும், தொகையும் குறிக்கப் பட்டிருந்தது. பக்தர்களுக்குத் தனித் தனியாக அர்ச்சனை செய்வதில்லை.) கியூ வரிசையில் நின்று தரிசனம் செய்து கொண்டு வரும்படி சொன்னார். அவ்வாறே ஜகஜ்ஜோதியாக அலங்காரம் செய்து கொண்டிருந்த திருக் கண்ணனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொண்டு சந்நிதிக்கு வெளியே வந்தோம். காத்துக் கொண்டிருந்த பூஜாரி எங்களை ஏனைய தெய்வங்களுடைய சன்னிதிகளுக்கு அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் "துலாபாரம்" செய்துகொண்டிருந்தார்கள். பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் பெரியவர்கள், சிறியோர் பலர் தராசில் உட்கார்ந்து கொண்டு தாம் வேண்டிக்கொண்ட பிரகாரம் காணிக்கை செலுத்தினார்கள்.
பகலில் கோபுரத்தின் மேல் மாடியில் சில யாத்திரிகள் காணப்பட்டார்கள். அவர்களைப் போல் தானும் மேலே ஏறலாம் என்று எண்ணி லதாவையும், பிரஹலாதையும் அழைத்துக் கொண்டு என் மனைவி சென்றாள். ஆனால் அப்போது தான் ஒரு குழுவை அநுமதித்திருந்ததால் வழியை அடைத்து விட்டார்கள். அடுத்த குழுவை அனுப்ப நேரமாகுமென்றதால் ஏமாற்றத்துடன் நின்று விட்டார்கள். (என்னுடைய வைஷ்ணவஸ்ரீ மைத்துனி நாம் எப்படி கடவுள் சந்நிதிக்கு மேலே போவது, ஆண்டவனை அவமதிப்பது போலாகும் எனத் தயங்கினாள்!)
கோயிலுக்கு வெளியே வந்து நின்ற யாவரையும் நிற்கச் சொல்லி நான் படம் பிடித்தேன்.


குருப்ரேரனா என்ற ஹோட்டலுக்குப் போய் "ஷரணம்" உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். பரிமாறும் சிப்பந்தி ஒருவன் சிரித்த முகத்துடன் எங்களை உபசரித்தான். நாங்கள் தென்னிந்தியர்கள் என்பதைப் புரிந்து கொண்டு இட்டிலி, தோசை காலை டிபன் கிடைக்கும் என்று சொன்னான். தமிழ் நாட்டிலிருந்து வந்த உறவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. இனி மேல் எங்கள் சாப்பாட்டைப் பற்றிய கவலை தீர்ந்தது! கோமதி நதியிலிருக்கும் தீர்த்த கட்டத்தைப் பார்த்துவிட்டு ஆற்றங்கரை யோரம் உலாவினோம்.
மறு நாள் "பேட் துவாரகா" என்ற கிருஷ்ண பகவானுடைய வாசஸ்தலத்தைப் பார்க்க ராதிகா ஹோட்டல் அலுவலகம் மூலமாக வேன் ஏற்பாடு செய்து கொண்டோம். குஜராத் மொழியில் "பேட்" என்றால் தீவு என அர்த்தமாம். துவாரகையிலிருந்து முப்பத்திரண்டு கிலோ மீடர் தூரத்தில் உள்ளது. பேட் துவாரகை தான் அசல் துவாரகை என்று சிலர் கருதுகிறார்கள்.
போகும் வழியில் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் நாகேஷ்வர் ஆலயம் இருக்கிறது. இந்த சிவலிங்கம் இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்தில் ஒன்றாகும். சுமார் அறுபது அடி உயரமான சிவபெருமான் சிலை சாலையின் ஓரத்தில் கம்பீரமாகக் காட்சி யளிக்கிறது.



நாகேஷ்வர் ஜோதிர்லிங்கத்தை வணங்கிய பிறகு, நாகேஷ்வர் ஆலயத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் "கோபி தலாப்" என்ற ஊரை அடைந்தோம். இங்கே ஒரு குளம் இருக்கிறது. இக் குளத்தில் குளிப்பதற்காக கிருஷ்ணர் வருவாராம். கோபிகளுக்கும் இந்த குளத்துக்கும் கிருஷ்ண லீலையில் ஒரு சம்பவத்தை சம்பந்தப் படுத்துகிறார்கள். மண் கட்டிகளை சந்தனக் கட்டிகள் என்று சொல்லி பாமர மக்களுக்கு விற்கும் வியாபாரியைப் பார்ர்த்தோம். அந்தோ இப்போது இக்குளம் வரட்சியான வெய்யிற் காலத்தால் காய்ந்து போயிருந்தது. (தண்ணீரும் இல்லை, குளிக்கக் கோபிகளும் இல்லை!)
இன்னும் சில கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்து சௌராஷ்டிரா மெயில் டெர்மினஸ் ஆன "ஓகா" (Okha) என்ற ரயில் நிலையத்தைத் தாண்டி பேட் துவாரகைக்குப் போகும் படகுகள் காத்துக் கொண்டிருந்த கடற் கரையை அடைந்தோம். எங்கள் வாடகைச் சிற்றுந்தின் ஓட்டுநரைக் காத்துக் கொண்டிருக்குமாறு பணித்து விட்டுப் படகுத் துறைக்குச் சென்றோம்.
இங்கே. தூரத்தில் "பேட் துவாரகை" தெரிகிறது. கடலைக் கடந்து செல்லப் பிரயாணிப் படகுகள் போய் வந்து கொண்டிருக்கின்றன.





படகுத்துறையில் அடுத்த படகு புறப்பட இன்னும் காத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே தனிப் படகு எங்களுக்காக வேண்டுமென விசாரித்தோம். அவ்வாறே ஒரு படகினை வாடகைக்குப் பேசிக் கொண்டு ஏறினோம்.









தொலைவில் காணப்பட்ட தீவின் நிலப்பரப்பில் ஆலயத்தையும் மசூதி ஒன்றையும் பார்த்தோம். சுமார் அரை மணி நேரத்தில் தீவை அடைந்தோம். படகுத் தூறையில்லிருந்து கொயில்லுக்குச் செல்லும் குறுகிய சாலையில் யாத்திரிக்கர் கூட்டம் திமு திமு என்று குழுமி யிருந்தது. இரண்டு பக்கமும் கடைகள். விதம் விதமான சாமான்கள்: பேட் துவாரகை வண்ணப் படங்கள், காலண்டர்கள், சுற்றுலாப் போட்டோக்கள், வழிகாட்டேடு புத்தகங்கள், இத்தியாதி வாங்கலாம்.
இங்கே இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணருடைய கோயிலுக்குக் கோபுரம் இல்லை; ஏனெனில் இது கிருஷ்ண பகவானுடைய வாசஸ்தலம். கிருஷ்ணர் சந்நிதிக்கு முன்பு நம்மூர் தொட்டி முற்றம் பொன்ற கட்டிடம். அவருடைய தேவியர்கள் ருக்மிணி, சத்தியபாமா, ராதா, ஜாம்பவதி, தேவகி ஆகியோருடைய படங்கள் வரையப் பட்டுள்ளன.
ஒரு வயதான புரோகிதர் எங்களை எல்லாவற்றையும் சுற்றிக் காட்டி ஸ்தல புராணத்தைச் சொன்னார். கண்ணபிரான் சந்நிதிக்கு மற்ற ஆலயங்களைப் போன்ற கோபுரம் இல்லாததற்குக் காரணம் இது கிருஷ்ணர் வசித்த மாளிகையே தவிர அரசாங்கம் செய்த தர்பார் அல்ல.
குசேலர் கண்ணபிரானுக்கு அவல் கொடுத்த கதை நம் யாவருக்கும் தெரிந்ததே. அந் நிகழ்ச்சி நடந்த இடம் இதுவே, ஆகையால் பக்தர்கள் - தரிசனம் செய்பவர்கள் - இங்கே அரிசி தானம் காணிக்கையாகக் கொடுப்பது தான் ஆதீகம் எனப் பூஜாரி விவரித்தார். நாங்களும் எங்கள் காணிக்கையாக அரிசி தானத்துக்கான கட்டணம் செலுத்தினோம். தனக்கு ஒன்றும் தக்ஷிணை கொடுக்கவேண்டாம், நாம் கட்டணையாகக் கொடுத்த அரிசி தானத்தைக் கொண்டு புரோகிதர்கள் அனைவருக்கும் அன்ன தானம் செய்வது வழக்கம், அதுவே போதும் என்று தக்ஷிணை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்!
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, நாங்கள் கடை வீதியில் நினைவுப் பொருள்கள் - பரிசுப் பண்டங்களை - அவரவர் விரும்பியபடி வாங்கிக் கொண்டு படகுத்துறைக்குத் திரும்பி வந்து படகிலேறிக் கொண்டோம். பேட் துவாரகை விஜயம் பற்றிப் பேசிக் கொண்டு துவாரகைக்குத் திரும்பி வந்தோம்.
நாங்கள் விரும்பி உண்ணும் ஷரணம் உணவகத்தின் வாயிலில் நின்று படம் பிடித்துக் கொண்டோம். புன்முறுவல் தவழும் முகத்தோடு எங்களுக்கு ஓடியோடி பரிமாறிய உணவு மேசைப் பணியாளர் கரன் என்பவருடைய போட்டோவை எடுக்காமற் போய்விட்டோம் என வருந்துகிறேன்.




கோமதி நதியோரத்தில் ஆற்றங்கரை நெடுக படிக்கட்டுகளும் ஸ்னானக் கட்டங்களும் பார்க்கப் பார்க்க நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கின்றன. அக் காட்சிகளைக் கீழே படங்கள் பிடித்துப் போட்டிருக்கிறேன்.





படகுக்குப் பின் புறம் தெரிவது ஆற்றின் மறு கரை. அதற்குப் பின்னால் சமுத்திரம். கோமதியாறு கடலில் கலப்பதைக் கீழேயுள்ள படத்தில் பார்க்கவும்.
வலது புறாம் தெரிவது சமுத்திரநாராயணன் ஆலயம்.





ச்

கீழேயுள்ள படத்தில் தூரத்தில் தெரிவது கலங்கரை விளக்கம்.




தமிழ் நாட்டிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் துவாரகைக்குப் பலவருடங்களுக்கு முன்பு வந்திருந்ததன் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப் பட்ட ஸ்தூபத்தைத் தேடிச் சென்று என் மைத்துனி போட்டோ எடுத்துக் கொண்டார்.









இவ்வாறாக துவாரகையில் மூன்று நாட்கள் பக்தி வெள்ளத்தில் மூழ்கி மகிழ்வடைந்தோம். புண்ணிய பூமியை விட்டுப் போக மைத்துனிக்கு விருப்பமேயில்லை. சென்ற இடம் எல்லாம் கிருஷ்ண பக்தர்களும், கோபிகளும் நிறைந்திருந்தனர்!
கடைசி நாளன்று கடை வீதிகளுக்குப் போய் ஞாபகார்த்தமாகப் பரிசுப் பொருள்களை வாங்கிக் கொண்டு, துவாரகையி லிருந்து புறப்பட்டோம். ஹோட்டல் சிப்பந்தி சுரேந்தர் ரயில் நிலையத்துக்கு வந்து வழியனுப்பினான். ரயில் நிலையத்தில் யாத்திரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த படங்கள் சிலவற்றைக் காண்கிறீர்கள்.









சௌராஷ்டிரா மெயிலில் ஏறி மும்பைக்குத் திரும்பினோம்.
இவ்வாறாக எங்கள் துவாரகை யாத்திரை நிறைவடைந்தது. 
This contains my travelogues such as Dwaraka pilgrimage etc.

ARCHIVES
09/01/2003 - 10/01/2003 / 11/01/2003 - 12/01/2003 / 03/01/2004 - 04/01/2004 / 10/01/2006 - 11/01/2006 / 10/01/2007 - 11/01/2007 / 11/01/2010 - 12/01/2010 /


Powered by Blogger